டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த 2000 கடைகளுக்கு நோட்டீஸ்.. சென்னையில் அதிரடி!

Print

சென்னை: டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த 2000 கடைகளுக்கு தமிழக அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பால் தினந்தோறும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். டெங்குவை தடுப்பதற்காகவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்து வருகிறது. எனினும் ஆங்காங்கே உயிரிழப்புகள் அதிகமாகிறதே தவிர, டெங்கு கட்டுப்படுத்தபாடில்லை. மேலும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் சாதாரண காய்ச்சல் வந்தாலே மக்கள் டெங்குவோ என்று அச்சம் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்புகள்
இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. மேலும் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு காணமுடியும் என தெரிகிறது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
டெங்கு காய்ச்சல் பரவக் காரணமாக இருக்கும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளை தொற்றுநோய் தடுப்பு இயக்கக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னையில் புதுப்பேட்டை, பார்டர் தோட்டம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குப்பைகள் தேங்கியுள்ளது தெரியவந்தது.
கொசுவின் புழுக்கள்
மேற்கண்ட பகுதிகளில் உள்ள டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருள்களில் தண்ணீர் தேங்கி அதில் டெங்கு பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் முட்டைகள், புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்க அந்த பொருள்களை அகற்ற 2000 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் அபராதம்
2000 கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்குவது கடினம் என்பதால் அந்த கடைகளின் சங்கங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 48 மணி நேரத்தில் 2000 கடைகளின் முன்பு தேங்கியுள்ள பொருள்களை அகற்றாவிட்டால் இந்திய தண்டனை சட்டம் 269-இன் கீழ் 6 மாத சிறையோ அல்லது ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Posted By: Lakshmi Priya Updated: Tuesday, October 10, 2017, 9:08 [IST] Oneindia.com