மகனின் சடலத்துடன் இரவு முழுவதும் சாலையில் தவித்த தாய்

Print

Saturday, 16 Sep, 4.21 am  

ஐதராபாத்: தெலுங்கானாவில், மகனின் சடலத்துடன், இரவு முழுவதும், சாலையில் ஒரு பெண் தவித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு: தெலுங்கானா தலைநகர், ஐதராபாத்தில் வசித்து வரும், ஈஸ்வரம்மா என்பவரின், 10 வயது மகன், டெங்கு காய்ச்சலால், மருத்துவமனையில் இறந்தார். ஈஸ்வரம்மா, மகனின் உடலை குளிர்பதன பெட்டியில் வைத்து, வீட்டுக்கு எடுத்துச் சென்றார். ஆனால், வீட்டின் உரிமையாளர், ஜெகதீஷ் குப்தா, உள்ளே அனுமதிக்கவில்லை. அனுமதியில்லை: வீட்டின் ஒரு அறை மட்டும், ஈஸ்வரம்மாவுக்கு வாடகை விடப்பட்டுள்ளது. மற்ற அறைகளில் ஜெகதீஷ் குப்தா குடும்பத்தினர் தங்கியுள்ளனர். தன் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில், சடலத்தை வீட்டுக்குள் அனுமதித்தால் அமங்கலம் எனக் கூறி, ஜெகதீஷ் குப்தா மறுத்துள்ளார்; டெங்கு காய்ச்சல் தொற்றிக் கொள்ளும், எனவும் கூறியுள்ளார். சாலையில்... செய்வதறியாத ஈஸ்வரம்மா, இரவு முழுவதும், தன் மகனின் உடலை, கொட்டும் மழையில் நனைந்தபடி, சாலையோரம் கிடத்தி, அமர்ந்திருந்தார். தகவலறிந்த போலீசார், ஜெகதீஷ் குப்தாவை எச்சரித்தனர். இதையடுத்து, நேற்று காலை, உடலை வீட்டுக்குள் எடுத்து வர, ஜெகதீஷ் குப்தா அனுமதித்தார்.

புகார் வராததால், ஜெகதீஷ் குப்தா மீது வழக்கு பதிவு செய்யவில்லை என, போலீசார் கூறினர். இதற்கிடையே, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப் போவதாக, சமூக ஆர்வலர், அசூட் ராய் தெரிவித்துள்ளார்.