பூந்தமல்லி பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு வாரத்தில் 4 பேர் பலி பதிவு: அக்டோபர் 08, 2017 12:47

Print

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவு பரவி உள்ளது.

பூந்தமல்லி, குமணன்சாவடி, திருவேற்காடு பகுதியில் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலில் கல்லூரி மாணவி ஷெரின்பானு, பள்ளி மாணவன் பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரையான்சாவடி, கீழ்மா நகர் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர், கழிவுநீர் அகற்றப்படாததே காய்ச்சல் பரவுவதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்க்கொண்டையூர், பெருமாள்பட்டு மணவாளநகர், அரண்வாயல், மேல் நல்லாத்தூர், கீழ் நல்லாத்தூர், பூங்காநகர் டீச்சர்ஸ் காலனி, ஈக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது.

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 9 பெண்கள் உள்பட 27 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 131 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தினமும் 300 பேருக்கும் மேல் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் இல்லை. காய்ச்சலை தடுக்க 26 அதிரடி காய்ச்சல் தடுப்பு குழுக்களும், 14 நடமாடும் மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.